in

அடம்பிடித்தால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்படுவார் ட்ரம்ப்!!

ஜனநாயகக் கட்சியினது பாரம்பரியக் கோட்டையான ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகள் முழுமையாக மீள எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு பைடன் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.

ட்ரம்ப் அணியினரது வேண்டுகோளுக்கு அமைய முழு வாக்குகளும் அங்கு மீளக் கையால் எண்ணப்படுகின்றன.

அலாஸ்கா வாக்கு முடிவுகள் அங்கு ட்ரம்புக்கு மேலும் மூன்று இடங்கள் கிடைக்கக் கூடும் என்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே 279 தெரிவுகளால் வெற்றியைத் தொட்டிருக்கும் ஜோ பைடன் ஜனவரியில் அதிகார கைமாற்றம் அமைதியாக இடம்பெறும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஜோ பைடனின் தெரிவு முறைப்படி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் -ஜனவரி 20 ஆம் திகதி மதியத்துக்குப் பிறகு – வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறமாட்டேன் என்று ட்ரம்ப் தொடர்ந்தும் அடாத்தாக அங்கு தங்கியிருந்தால் ரகசிய சேவையினர் (United States Secret Service) அங்கிருந்து அவரை அப்புறப்படுத்துவர் என்று “நியூஸ் வீக்” சஞ்சிகையில் தகவல் வெளியாகி இருக்கிறது.

“தனக்குச் சொந்தம் இல்லாத சொத்து ஒன்றை விட்டு விலக மறுத்து அடம்பிடிக்கும் ஒரு வயோதிபர் எவ்வாறு நடத்தப்படுவாரோ அந்த வகையிலேயே ட்ரம்பும் கவனிக்கப்படுவார்.” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

சட்ட முஸ்தீபுகளால் தேர்தல் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பது நீண்ட காலத்துக்குப் பின்தள்ளிப் போகின்ற நிலைமை உருவாக்குவதாக வைத்துக் கொண்டாலும் கூட ஜனவரி 20 ஆம் திகதிக்குப்பின்னர் ட்ரம்ப் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியில் தொடர்வதற்கும் அவருக்கு சட்டரீதியான தகுதிகள் இருக்காது.

நாட்டின் நிர்வாகக் கைமாற்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பான அமெரிக்க உயர் அதிகாரிகள் மேற்கண்ட தகவல்களை வெளியிடுகின்றனர்.

தேர்தல் முடிவுகளின் படி பைடன் 270 க்கும் மேற்பட்ட பெரும்பான்மை பெற்று வெற்றியாளராகத் தெரிவாகியதை பிரதான ஊடகங்களும் முகவர்களும் மதிப்பிட்டுள்ள போதிலும் வாக்கு எண்ணும் பணிகளும் ஏனைய தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளும் இன்னும் பூரணமாக நிறைவடையவில்லை.

ரஷ்யா, சீனா, வடகொரியா, பிறேசில் போன்ற சில நாடுகளின் தலைவர்களைத் தவிர ஏனைய உலகத் தலைவர்கள் பைடனின் வெற்றியை ஏற்றுக்கொண்டு அவருக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். நாட்டை நிர்வகிக்கின்ற தனது பூர்வாங்கக் கடமைகளை வெள்ளை மாளிகைக்கு வெளியே இருந்தவாறே தொடங்கி விட்டார் பைடன்.

ஆனால் தேர்தலில் ட்ரம்ப் படுதோல்வி அடையவில்லை. முக்கிய மாநிலங்களில் அவர் பைடனுக்கு மிக நெருக்கமாகவே வந்திருக்கிறார். ஜனநாயகத் தீர்ப்பை அமெரிக்கர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தாலும் நாட்டில் பாதி சனத்தொகை ட்ரம்புக்கு ஆதரவாக நிற்பதை மறுத்துவிடமுடியாது.

பைடனுக்கு வெற்றிவாய்ப்பை வழங்கிய முக்கிய மாநிலங்களின் முடிவுகளைத் தனித்தனியே கேள்விக்கு உள்ளாக்கும் சட்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் அணியினர் மும்முரமாக ஆரம்பித்திருக்கின்றனர்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியின் முகவர்கள் வாக்கு எண்ணப்படும் பணிகளைக் கண்காணிப்பதற்கு சமூக இடைவெளித் தூரம் ஒரு தடையாக இருந்தது என்ற சர்ச்சை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய சட்டச் சிக்கல்களைத் தாண்டி பைடனின் வெற்றி இனிமேல்தான் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத் தப்படவேண்டி உள்ளது. அதற்கு சில வாரங்கள் பிடிக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் சட்டச் சிக்கல்களைத் தாண்டி பைடனின் வெற்றியை தேர்தல் திணைக்களம் உறுதி செய்த பிறகே அடுத்தகட்டமாக அதிகாரக் கைமாற்ற ஏற்பாடுகள் அதற்குரிய ஒழுங்கில் நடைபெறும்.
பதவியேற்புக்கு முன்பாக ஜோ பைடன், கமலா ஹரிஸ் ஆகியோரது தெரிவுகளை அமெரிக்கக் காங்கிரஸ் ஜனவரி 6 ஆம் திகதி உறுதி செய்ய வேண்டும்.

மாறாக சட்ட முட்டுக்கட்டைகள் காரணமாக ஜனவரி 20 ஆம் திகதி பைடன் பதவியேற்பது தடைப்பட்டாலும் ட்ரம்ப் தொடர்ந்து வெள்ளை மாளிகை அதிகாரத்தில் நீடிப்பதற்கு அரசமைப்பில் ஏற்பாடுகள் கிடையாது. அதன் பிறகு சபாநாயகர் நான்ஸி பெலோசி (Nancy Pelosi) அம்மையாரே அமெரிக்காவின் இடைக்கால ஜனாதிபதியாக விளங்க முடியும்.

“தப்பான வாக்களிப்பு” (“electoral fraud”) ,”களவாடப்பட்ட வாக்குகள்” (“stolen votes” ) என்ற வார்த்தைகளால் பைடனின் வெற்றியை விமர்சித்து அதை ஏற்க மறுத்துவரும் ட்ரம்ப், தேர்தலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு வெள்ளை மாளிகையை விட்டு விலகப்போவதில்லை என இதுவரை வெளிப்படையாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் சுமுகமான வழிமுறைகளில் அவர் அங்கிருந்து அகல்வார் என்பதற்கான அறிகுறிகள் இன்னமும் தென்படவில்லை. அவ்வாறு அவர் வெளியேற மறுக்கும் பட்சத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.

ஜனாதிபதியாக ஒருவர் பதவியேற்று பதவிவிலகும் வரை அவரது பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் ரகசிய சேவையினர்.

கடந்த சில ஆண்டுகளாக ட்ரம்புக்குப் பாதுகாப்பு வழங்கிவந்த ரகசிய சேவைப் பிரிவினர் ஜனவரி 20ஆம் திகதி வெள்ளைமாளிகையில் இருந்து அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியேற்றுமாறு பணிக்கப்படலாம்.

அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் பதவியில் இருந்த அதிபர் எவரும் பதவிக்காலம் முடிந்த பிறகு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்ததில்லை. அதனால் அதிபரை பலாத்காரமாக வெளியேற்றுவது குறித்து வெளியாகின்ற இத்தகைய தகவல்கள் நாட்டுக்குப் புதிய அனுபவங்களாகின்றன.

“ட்ரம்ப் தானாக வெளியேற மறுத்தால் அவரை வெளியேற்றுவோம். தேவையேற்பட்டால் ரகசிய சேவையினர் அவரது உடல் மீதும் கை வைக்கலாம்…”

“புதிய அதிபர் பதவியேற்கும் சமயத்தில் ட்ரம்ப் முப்படைகளின் தளபதி என்ற அதிகாரத்தை இழந்துவிடுவார். எனவே தன்னோடு உள்ள பாதுகாவலர்களை அவர் கட்டுப்படுத்த முடியாது போகும்.”

“வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிச் செல்ல வழமை போன்று ஜனாதிபதிக்கான விமானப்படையின் விசேட விமானம் காத்திருக்கும். அது அவருக்கான கடைசிச் சந்தர்ப்பம். அந்த விமானத்தை ஏற்காவிட்டால் தனது சொந்த செலவில் ஒரு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி அதிலேயே அவர் பயணம் செய்ய நேரிடும் என்ற தகவல் அவரிடம் தெரிவிக்கப்படும்.”

இவ்வாறு பென்டகன் வட்டாரங்கள் கூறுவதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

நாட்டின் மரபுப்படி விரும்பினால் பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு அவரை வாழ்த்தி விடைபெறுவதற்கு ட்ரம்புக்கு சந்தர்ப்பம் உண்டு.

ஆனால் 46 ஆவது ஜனாதிபதியின் பதவியேற்பில் 45 ஆவது அதிபர் கலந்து கொள்வாரா என்பது பெரும் கேள்விக்குறி.

ட்ரம்ப் முரண்டுபிடிக்காமல் சுமுகமாக வெள்ளைமாளிகையை விட்டு கௌரவமாக விலகிச் செல்வாரா? அதனை அடுத்த ஆண்டு தொடங்கும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குமாரதாஸன் – பாரிஸ்.

What do you think?

98 இலங்கையர்கள் கொரோனாவால் வெளிநாடுகளில் உயிரிழப்பு!!

20 year old rookie pacer Dilshan Madusanka in Sri Lanka probable squad for South Africa