அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க, அவருக்குப் பொருத்துவதற்காக இதயத்தைக் கொண்டுவந்த உலங்குவானூர்தி விபத்திச் சிக்கியது.
முதல் முறை இதயத்தை சுமந்து வந்த உலங்குவானூர்தி கீழே விழுந்தது, அடுத்த முறை இதயத்தை கையில் கொண்டு வந்த மருத்துவ ஊழியர் தடுக்கி கீழே விழ, இரண்டாவது முறையாக இதயம் கீழே விழுந்தது.
அந்த இதயம் இரு தடவைகள் வெளியே தவறி விழுந்தபோதும், அதன்பின்னர் வெற்றிகரமாக அந்த நபருக்கு இதயம் பொருத்தப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாண்டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்சிலுள்ள மருத்துவமனை ஒன்றுக்கு இதயம் ஒன்றைக் கொண்டு சென்ற உலங்குவானூர்தி, மருத்துவமனையின் மேல்தளத்தில் இறங்கியது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த உலங்குவானூர்தி விழத் தொடங்க, அதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அலறியபடித்து ஓட்டம் பிடித்தனர்.
உலங்குவானூர்தி இறங்குமிடத்தில் சரிந்து விழ, அதன் இறக்கைகள் எல்லாம் நொறுங்கின. உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் உலங்குவானூர்திக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. விமானி மட்டும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உடனடியாக, கருவிகள் உதவியுடன் உலங்குவானூர்தியை வெட்டி, இதயத்தை பத்திரமாக வெளியே எடுத்தனர் மீட்புக் குழுவினர்.
அதை அவர்கள் மருத்துவ ஊழியர் ஒருவரிடம் ஒப்படைக்க, வேகமாக அந்த இதயத்தை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்ல முயன்ற அந்த ஊழியர், பதற்றத்தில் தடுக்கி கீழே விழுந்தார்.
அந்த இதயமும் கீழே விழுந்தது. ஆனால் அந்த இதயத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அது நல்லபடியாக உரிய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.