அமெரிக்கா – ஜெர்மனி கூட்டு முயற்சியில் உருவான புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த நூறு ஆண்டுகளில் மருத்துவத்துறையில் நிகழ்ந்த பெரும் முன்னேற்றகரமான நிகழ்வாக இதனைக் கருத முடியும் என்று தடுப்பு மருந்தை தயாரித்த அமெரிக்காவின் Pfizer நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மருத்துவர் அல்பேர்ட் பூர்லா (Albert Bourla) குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாகத் தடுப்பூசி மருந்துகள் சாதாரண குளிரூட்டிகளில் வைத்துப் பேணிப் பயன்படுத்தக் கூடியவை. ஆனால் Pfizer – BioNTech கூட்டு முயற்சியில் உருவாகி இருக்கும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி குறைந்தது மைனஸ் 70 டிகிரி உறை குளிரில் (-70 degrees) இருபத்துநான்கு மணிநேரமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்று Pfizer நிறுவனம் தெரிவித்துள்ளது.
நம்பிக்கைக்குரியது என்று கருதப்படும் அந்தத் தடுப்பூசிக்கான உலகளாவிய கேள்வி மிக உச்ச அளவைத் தொட்டு நிற்கும் நிலையில் பாதுகாப்பானதும் தரம் வாய்ந்ததுமான விசேட உறை குளிரூட்டிகளில் (biomedical ultra-low temperature freezers) வைத்து அவற்றை உலகெங்கும் விநியோகிப்பது பெரும் சவாலான விடயமாகியிருக்கிறது.
மைனஸ் எழுபது பாகை செல்சியஸ் குளிரூட்டிகள் பொதுவாக ஆய்வு கூடங்களிலும் முக்கியமான மருத்துவமனைகளிலும் மாத்திரமே காணப்படும். எனவே கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக வைத்துப் பேணுவதற்கு சூட்கேஸ் போன்ற கையடக்கமான சிறிய உயர்ந்த தர குளிரூட்டிகள் அவசர தேவையாகி உள்ளன.
அத்தகைய குளிரூட்டிகளைத் துரித கதியில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஜெர்மனியின் தொழில்நுட்ப நிபுணத்துவக் குழுமமான MECOTEC நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் தடுப்பூசி புட்டிகளைப் பேணி எடுத்துச் செல்லக்கூடிய நவீன ஆழ் குளிரூட்டி கொள்கலன்களைத் தயாரிக்கும் பணிகளை உடனேயே ஆரம்பித்திருப்பதாக அறிவித்துள்ளது.
ஆனால் சடுதியாகப் பெருந்தொகையில் அவ்வாறான குளிரூட்டிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தம்மிடம் இல்லை என்று வேறு சில தொழில் நிறுவனங்கள் கை விரித்துள்ளன.
விமானப் போக்குவரத்து சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப் போயுள்ள நிலைமையில் உலகின் சகல பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்தை விரைவாக விநியோகிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மருந்து தயாராகி விட்டது என்ற அறிவிப்பு வெளியான கையோடு மில்லியன் கணக்கில் தடுப்பூசியை வாங்குவதற்காக உலக நாடுகள் பலவும் Pfizer நிறுவனத்துடன் உடன்படிக்கைகளைச் செய்யத்தொடங்கிவிட்டன.
ஜரோப்பிய ஒன்றியம் முதற்கட்டமாக 300 மில்லியன் தடுப்பூசிப் புட்டிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளது என்ற தகவலை அதன் தலைவர் இன்று வெளியிட்டிருக்கிறார்.