in

தளபதி ஸ்டாலினிடம் மலையக தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், தமிழகத்தன் முதல்வராக ஸ்டாலின் விரைவில் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் தி.மு.கவுக்கும், ஸ்டாலினுக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இதன்படி மலையக அரசியல் தலைவர்களும் சமூகவலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் – 

தமிழக தேர்தல் முடிவுகளில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் இலங்கை எமது தாய்நாடு. இந்திய தமிழகம் எங்கள் தந்தையர் நாடு.

அறிஞர் அண்ணா உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் முத்துவேலு கருணாநிதி வளர்த்து விட்ட திராவிட முன்னேற்ற கழகத்துக்கும், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் உருவாக்கி,

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வளர்த்து விட்ட  அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் இடையில்தான் ஆரம்பத்தில் இருந்தே பிரதான போட்டி. ஏனைய அனைத்து கட்சிகளும் துணை அரசியல் பாத்திரங்களையே வகிக்கின்றன.

தமிழக உடன் பிறப்புகள் தரும் ஜனநாயக முடிவுகளை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே, இலங்கையில் நாம் கணிக்க வேண்டும்.

இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினை என்பது, தமிழக மக்கள் முன்னாலே உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றாகும். அங்கு வாழும் சுமார் எட்டு கோடி தமிழர், எமது உடன்பிறப்புகள்.

அந்த எட்டுக்கோடி என்பது எமது பாதுகாப்பு கவசம். கடந்த காலங்களில் அந்த பாதுகாப்பு கவசம் சரியாக பயன்படாமல் போய் விட்டது. இதற்கான காரணங்கள் பல.  அவற்றை ஆராய்வது இப்போது உசிதமானதல்ல.  ஆகவே, கடந்த காலங்களை மறந்து விட்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும்  வாழ்த்தி வரவேற்போம்.

இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான்

தமிழகத்தில் நடைப்பெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள   திமுக தலைவர்  மு‌.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னுடைய சிறுவயதிலேயே அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த  திமுக தலைவர்   மு‌.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும் தமிழக துணை முதல்வராகவும், 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

இந்த பெருந்தொற்று காலத்தில் தமிழக மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக திகழும் திரு ஸ்டாலின், அரசியல் வாழ்வில் மேன்மேலும் வெற்றியடைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தமிழக சட்ட மன்ற தேர்தலில் பத்து வருடங்களுக்கு பின்பு அதிகபடியான தொகுதிகளில் வெற்றிக்கொண்டு எதிர் வரும் காலத்தில் தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் திறாவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மூ.கா.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

இராதாகிருஷ்ணன் – ம.ம.மு. தலைவர்

இலங்கையில் புரையோடி போயுள்ள இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் திமுக வின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் வே.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

Paid Ad

What do you think?

புலிகள் அமைப்புக்கு சார்பாக இணையத்தில் பரப்புரை; ஏறாவூரில் ஒருவர் கைது

10 ஆண்டுகளுக்கு பின்னர் அரியணையேறும் தி.மு.க.!