உலகத் தொற்று நோயியல் நிபுணர்களது கவனம் முழுவதும் கடந்த வாரம் டென்மார்க் நாட்டின் பக்கம் திரும்பி இருந்தது.
வைரஸ் பேரிடருக்கு முடிவு கட்டக் கூடிய நம்பிக்கை தரும் தடுப்பு மருந்து ஒன்று பற்றிய அறிவிப்பை பலரும் வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மறுபுறம் உலகின் ஒரு மூலையில் புதிய வைரஸ் குறித்த அச்சம் பரவியிருந்தது.
“கிளஸ்டர் 5” (“Cluster 5”) எனப் பெயரிடப்பட்ட புதிய மிங் வைரஸ் அது.
தோலுக்காக வளர்க்கப்படும் மிங்(mink) எனப்படும் சிறிய பாலூட்டி விலங்கு இனத்தை நாட்டிலிருந்து முழுவதுமாக கொன்றொழித்துவிடுவது என்ற திடீர் அறிவிப்பை டென்மார்க் பிரதமர் மெற் பிரெட்றிக்சன் அம்மையார் (Mette Frederiksen) வெளியிட்டார்.
அதன்படி நாடு முழுவதும் பண்ணைகளில் மில்லியன் கணக்கில் மிங் விலங்குகள் குஞ்சு, மூப்பு என்ற பேதம் ஏதுமின்றி நச்சு வாயு மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு பாரிய குழிகளில் கும்பலாகப் புதைக்கப்பட்டன. வேகமாகவும் மொத்தமாகவும் கொல்வோருக்கு ஊக்கத் தொகைகள் அறிவிக்கப்பட்டன.
பொதுவாக விலங்குகள் காபன் மொனொக்சைட் மற்றும் டியோக்சைட் (carbon monoxide and dioxid) வாயு மூலம் முப்பது நொடிகளில் மூச்சிழக்கக் கூடியவாறு கொல்லப்படுவதே வழக்கம் என்றாலும் அவை மரண வேதனையிலிருந்து விடுபட நீண்ட நேரம் எடுக்கும் என்று விலங்கு உரிமை பேணுவோர் குரல் எழுப்புகின்றனர். அவற்றுக்கு மத்தியில் கொலைப் படலம் தொடர்கின்றது.
கொல்லப்பட்ட விலங்குகள் பாரிய புதைகுழிகளில் கொட்டுவதற்காக இராணுவக் கொள்கலன் வண்டிகள் மூலம் தெருக்களில் எடுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வெளியாகிக் காண்போரை உலுக்கின.
மிங் பண்ணைகள் நிறைந்த வடக்கு யூலன்ட் நிலப்பரப்பு (Jutland Region) மூடி முடக்கப்பட்டு ஒருமாத கால போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
“கிளஸ்டர் 5” (“Cluster 5”) எனப் பெயரிடப்பட்ட மிங் வைரஸ்,மனிதர்களில் 200 பேருக்குத் தொற்றியமை தெரியவந்தது. அவர்களில் 12 பேரில் இருந்து பெறப்பட்ட வைரஸ் மாதிரிகள் “கொவிட் 19” வைரஸில் இருந்து மாற்றமடைந்து திரிபு பெற்ற (Mutated strain) ஒரு புது வடிவத்தை வெளிப்படுத்தின.
மூல வடிவத்தில் (genetic code) இருந்து மாறிய புதிய வைரஸ் (new coronavirus strain) எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகளின் செயற்பாட்டுத் திறனைக் கேள்விக்குள்ளாகலாம் என்றும் புதிய வடிவத்தில் மீண்டும் அது மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரவலாம் என்றும் டென்மார்க்கின் பிரதான தொற்றுநோயியல் ஆராய்ச்சி நிபுணர்கள் அவசரமாக அரசை எச்சரித்தனர். மிங் விலங்குகளை முற்றாக அழிக்கும் திடீர் தீர்மானத்துக்கு அதுவே காரணமாகியது.
“கொவிட் 19” வைரஸ் மனிதரில் இருந்து விலங்குகளுக்குத் தொற்றி அங்கு தீவிரமான புதுவடிவம் எடுத்து மீண்டும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றதா?
அலையலையாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸிடம் இருந்து மனித குலத்தைக் காப்பாற்றறுவதற்காக அந்த வைரஸின் மரபு வடிவத்தை(Viral genetic code) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுவரும் தடுப்பூசிகளை விலங்குகளில் இருந்து வீரியம் பெற்றுவரும் புதிய வைரஸ் பயனளிக்காமற்போகச் செய்துவிடுமா?
டென்மார்க்கை மையமாகக் கொண்டு எழுந்த இந்தக் கேள்விகள் மருத்துவ உலகைப் பெரும் பரபரப்புக் குள்ளாக்கின.
பிரான்ஸில் சிறிய அளவில் இயங்கும் மிங் பண்ணைகளை இழுத்து மூடுமாறு அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் எழுந்தன.
புதிய வைரஸ் அச்சம் காரணமாக மில்லியன் கணக்கான மிங் விலங்குகளை ஒரேயடியாகக் கொல்ல டென்மார்க் பிரதமர் எடுத்த தீர்மானம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அவரது அரசை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.
நாடாளுமன்றத்தின் ஊடாக சட்ட வலு உள்ள தீர்மானம் ஒன்றை நிறைவேற்றாமல் பிரதமர் தன்னிச்சையாக எடுத்த முடிவை பிரதான எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. சுகாதார அமைச்சர் பதவிவிலக வேண்டும் என்ற கோஷங்களும் எழுந்துள்ளன.
தற்போதைய சுகாதாரச் சட்டங்களின் படி வைரஸ் தொற்றிய பண்ணைகள் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே விலங்குகளை அழிக்க முடியும். பிரதமரின் வாய் மொழியான – சட்ட வலுவற்ற- ஓர் அறிவிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் மிங் விலங்கினத்தைக் கொன்றுவிட முடியுமா என்ற விவகாரம் பெரும் சட்டச் சிக்கலாக மாறியுள்ளது.
சட்ட அதிகாரம் இல்லாத ஓர் அறிவிப்பை விடுத்தமைக்காகப் பிரதமர் பிரெட்றிக்சென் பண்ணையாளர்களிடம் பின்னர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
ஆனாலும் நாட்டுக்குப் பெரும் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் பிரதான தொழில் துறையின் பெரும் பகுதி முழுவதுமாக அழித்தொழிக்கப் பட்டுள்ளது. மிங் பண்ணைத் தொழில் துறை பில்லியன் கணக்கான இழப்பைச் சந்தித்துள்ளது.அரசு மீது பண்ணையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
“நாங்கள் பல்லாயிரக்கணக்கில் விலங்குகளை மட்டும் கொல்ல வில்லை. அவற்றோடு சேர்த்து எங்கள் பாரம்பரிய தொழிலையும் கொன்றொழிக்கிறோம்” என்று அவர்கள் புலம்புகின்றனர்.
அமெரிக்க நிபுணர்கள் சிலர் இந்த “விலங்கு வைரஸ் குறித்துப் பதற்றப்பட வேண்டாம்” என்கின்றனர். வைரஸுகள் ஓர் உயிரினத்தில் இருந்து மற்றோர் உயிரினத்துக்குப் பரவும் போது அவை மாற்றம் பெறுவது வழக்கம் என்று அவர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள மிங் பண்ணைகளில் ஏற்கனவே இதுபோன்ற தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் வேறு சில நாடுகளைச் சேர்ந்த தொற்று நோயியலாளர்களோ இது ஒர் எதிர்கால அச்சுறுத்தல் என்று எச்சரிக்கின்றனர்.
“கோரோனா வைரஸ் மிங் விலங்குகளிடையே தொடர்ந்து பரவுவதன் மூலம் பரிணாம வளர்ச்சி பெற்று திரிபடைந்த மரபு வடிவத்தில் அது மீண்டும் மனிதர்களிடையே தொற்றக்கூடும்” – என்று பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர் சேர் ஜெரமி பரார் (Jeremy Farrar) கூறுகிறார்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளது சுகநலனுக்காக இயங்கும் “Wellcome Trust” என்னும் மருத்துவ ஆய்வுத் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளரான அவர், மிங்குகள், எலி, சுண்டெலி, மர எலிகள், சில வகைப் பூனைகள் போன்றவற்றின் ஊடாக திரிபடைந்த வைரஸ் அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் மனிதர்களிடையே பரவக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.
டென்மார்க் நிலைமையை உதாரணமாகக் கொண்டு இது போன்ற பல எச்சரிக்கைகள் அறிவியலாளர் களால் வெளியிடப்பட்டு வருகின்றன.
மிங் பண்ணைத் தொழிலை டென்மார்க் உட்பட பல நாடுகளும் சட்ட ரீதியாக முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் அதற்கு முன்பாக பண்ணைகளுக்குள் வைரஸ் புகுந்து விட்டது.
இறைச்சிக்காகவும் பிற தேவைகளுக்காகவும் மிங்குகளை மட்டுமன்றி பறவைகளையும் பிற விலங்குகளையும் கூண்டுகளில் அடைத்துவைத்துப் பெரும் எண்ணிக்கையில் இனப்பெருக்கி லாபம் ஈட்டும் கைத்தொழில்துறைப் பண்ணை நடவடிக்கைகள் (Industrial farming) எதிர்காலத்தில் மேலும் புதிய தொற்று நோய்கள் பரவ வழிவகுக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
காட்டு விலங்குகளில் தொடங்கிய வைரஸ் தற்சமயம் நாட்டுக்குள் பண்ணை விலங்குகளிடையே பரவுவதால் எதிர்காலத்தில் பண்ணைகள் புதிய பல வைரஸின் பிறப்பிடங்களாக மாறிவிடலாம்.
சுகாதாரமற்ற சூழலில் விலங்குகளை வகை தொகை இன்றி அடைத்து வைத்துக்கொண்டு மனிதர்கள் மட்டும் மாஸ்க்கை அணிந்து, தமக்குள் சமூக இடைவெளி பேணிக் கட்டுப்பாட்டுடன் நடப்பதால் மட்டும் வைரஸை வெற்றிகொள்ள முடியாது என்ற யதார்த்தத்தை கொரோனா சகாப்தம் உறைப்பாய் உணர்த்திச் செல்கிறது.
குமாரதாஸன் – பாரிஸ்
14-11-2020.