யாழ்ப்பாணம் நகர் பகுதியில் மூன்று இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பேரும், அவர்களிடம் இருந்து பொருள்களை வாங்கிய குற்றச்சாட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பாசையூர் குருநகர் மற்றும் பொஸ்கோ பாடசாலைக்கு அண்மையில் வசிப்பவர்களாவர். இவர்கள் 23 தொடக்கம் 40 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், மருதடி ஒழுங்கையில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு இலத்திரனியல் பொருள்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன. அண்மையில் அரியாலை, துண்டில் பகுதியில் உள்ள இரு கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாடுகளை அடுத்துப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 பவுண் தங்கச் சங்கிலியும், இலத்திரனியல் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.