in ,

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்!! – திட்டமிட்டவாறு நடக்குமா?

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் இருக்குமானால் நிகழ்வைப் பிற்போட்டு கொவிட் – 19 தொற்று நிலைமை சீரடைந்த பின்னர் நடந்தலாம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் தற்போது கொரேனா வைரஸ் பரவல் வலுப்பெற்றிருக்கும் நிலையில், பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பொதுப் பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இன்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜாவின் ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முக்கியமாக பட்டம் பெறும் நபர் மட்டுமே பல்கலைக் கழகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பெற்றோர், விருந்தினர் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும். பட்டதாரிகள் உடல் வெப்பநிலை அளவிடப்படும், கை சுத்திகரிப்புத் திரவத்தால் சுத்திகரிக்கப்படும், ஆகக்குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வு நடைபெறும் சுற்றாடலில் உணவு கையாளும் நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. நிகழ்வுகளில் பங்கேற்க வந்தவர்கள், ஏனையவர்கள் உள்ளக விளையாட்டரங்களில் அல்லது வெளிப்புறங்களில் ஒன்றுகூட இடமளிக்கப்பட மாட்டாது.

பட்டதாரிகள் ஆடியபாதம் வீதியில் உள்ள மருத்துவபீட பிரதான வாயில் ஊடாக மட்டும் உள்நுழைய அனுமதிக்கப்படுவர். பட்டமளிப்பு முடிந்து வெளியேறுவோர் பல்கலைக் கழக மைதானத்தின் வாயில் ஊடாக மட்டும் வெளியேற அனுமதிக்கப்படுவர்.

ஆடியபாதம் வீதி, வளாக வீதி, தபால் பெட்டி சந்தி மற்றும் மைதானத்தை அண்டிய பகுதிகளில் வாகங்கள் தரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. வாகனங்களில் வருவோர் வளாக ஒழுங்கைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஊடகங்களுக்கு தேவையான தகவல்கள், செய்திகள் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊடுகப் பிரிவால் வழங்கப்படும். பட்டமளிப்பு விழா இணையம் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் ஒளிபரப்பப்படும்.

What do you think?

P2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது!! – நடந்தது என்ன?

எதிர்ப்புக்களுக்கு ஒவியா செம்ம கூல் Reply.., என்ன பதிவிட்டுள்ளார் தெரியுமா?