in

லலித், குகன் வழக்கு: கோத்தாபயவுக்கு வழங்கிய அழைப்புக் கட்டளை மேன்முறையீட்டு நீதிமன்றால் இரத்து!

காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு மீதான வழக்கில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று வழங்கிய அழைப்புக் கட்டளை மேன்முறையீட்டு நீதிமன்றால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சார்பில் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த உத்தரவைக் கொழும்பு மேல் நீதிமன்று வழங்கியுள்ளது.

2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் லலித் மற்றும் குகன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆகப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்துக்கான ஒழுங்கமைப்புக்களை மேற்கொண்டிருந்தபோது அவர்கள் ஆவரங்கால் பகுதியில் காணாமல் போயிருந்தனர்.

அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்குக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2012ஆமு் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகின.

ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தை ஆகியோர் முதலில் சாட்சியம் வழங்கினர்.

அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உட்படச் சிலர் சாட்சியமளித்தனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, மன்றில் சாட்சியளிக்குமாறு 2019ஆமு் ஆண்டு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டது.

பாதுகாப்புக் காரணங்களைக் கூறி சாட்சியமளிப்பதைத் தவிர்த்த கோத்தாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளிப்பதைத் தடுத்துக் கட்டளையிடக் கூறி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சாட்சியமளிப்பதற்கான இடைக்காலத் தடைக் கட்டளையை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வழங்கியது.

தற்போது அந்த மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலரும், தற்போது ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய அழைப்புக் கட்டளையை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

What do you think?

இன்றைய ராசிபலன் – உங்களுக்கு எப்படி?

நினைவேந்தல் தடை மனு!! – வழக்கை 3 மணிக்கு ஒத்திவைத்தது யாழ்.நீதிமன்று!