“பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரைப் பலமணி நேரம் தடுத்து வைத்த பொலிஸார், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் விடுவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை” கவனயீர்ப்புப் போராட்டம் கடந்த 3ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு பொலிஸார் பருத்தித்துறை உட்படச் சில இடங்களில் நீதிமன்றத் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், தற்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
பேரணியில் பங்குகொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் இலக்கத்தை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்பாகக் கூடியிருந்தனர்.
இளைஞரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்படும் என்று பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டத்தில் பங்குகொண்ட அரசியல்வாதிகள் மீது பருத்தித்துறை, முல்லைத்தீவு நீதிமன்றங்களில் பொலிஸார் “பி” அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், பொலிஸார் இளைஞரைக் கைது செய்துள்ளனர்.